Monday, August 25, 2008

கவிதைகள்

உந்தன் மீதான எந்தன் வன்முறை

தூங்கும் உந்தன்
துயரக் கடலில் கலவி காணும் எண்ணம்

மெல்லியதாய் வீங்கி நிற்கும்
உந்தன் சதையில் குழைய நினைக்கும் விரல்கள்

மாசுபடா மனசு மேலே
துவழ நினைக்கும் கன்னம்

மேனி உந்தன் தேனின் மீதில்
எறும்பாய் ஊற நினைக்கும் கண்கள்
இரவுகளும் தூங்கிவிடும் - ஆனால்

உந்தன் மீதான எந்தன் வன்முறைகள் தூங்கிடாது

வன்முறையோ மென்முறையோ தெரியவில்லை
இருந்தும் பன்முறைகள் நடந்திட்டது.


ஒன்றன் மேல் ஒன்றாய் சக்கரம் போல்
ஒன்று இரண்டு மூன்று நான்கையும்
தாண்டிட்டது குழந்தை
இனி உனக்கும் பழகிப் போயிருக்கும்
மெல்ல மெல்ல…


எம்.எஸ்.எம். அஸாருதீன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உனதும் எனதும் உறவும் பிரிவும் பற்றிய பாடல்


எனக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில்
நீ உன் பெருங்கவிதையினை வாசித்தாய்.
அன்றைய பொழுதின் வேகத்தினையும் விட உன் கவிதைச் சொற்களின்
கூர்மையாக்கப்பட்ட வேகம் மிகவும் வலுத்திருந்தது.

உன் பெருங்கவிதையின் ஒவ்வொரு உச்சரிப்பின் பின்னும்
நான் அதற்கென அரசியல் கண்டுபிடித்தேன்.
உன் பெருங்கவிதைக்குள்ளே உணர்ச்சி, சுயம், ஆழம், தூய்மையென
அனைத்து மனிதமும் நிறைவாய் இருந்தது.
நீ மிக உயர்ந்த இடங்களில் எழுந்து நின்று


~என் கவிதைகள் நமக்கே| யென உரத்த குரலில்
என்னை அரவணைத்துக்கொண்டு முழங்கினாய்.

உன் கவிதை எனக்கும் இனித்தது
உன் கவிதை எனக்கும் உறைத்தது
உன் கவிதை எனக்கும் உயிரானது
உன் கவிதை எனக்கும் பலமானது
உன் கவிதை எனக்கும் வலுத்தது
உன் கவிதை எனக்கும் எனக்கானது

உன் கவிதை என்னையும் எழுப்பியது

நீ உன் கவிதையில் அன்பை விதைத்து நாமொன்று என்றாய்
நமது இனங்களின் தொடக்கங்களை இணைத்தாய்
நமது குடிப்பரம்பலை நிறுவினாய்
நாம் இறைவனால் இணைக்கப்பட்டோமென்றாய்

நம்மை பிரித்துவிட்டார்களென்றாய்
நாம் இணைந்து கொள்வோமென்றாய்
நமக்கென நிலம் வேண்டுமென்றாய்
நமக்கென புதிய வரலாற்றினை எழுதினாய்.

நான் உன் கவிதையினை புரிந்துகொண்டேன்
அப்போதெல்லாம் நீயும் என்னை அரவணைத்தாய்
உன்னுடன் உறவாடுவது என்னை எனக்குப்பிடித்ததினை விட பிடித்துப்போனது

மகத்தான ஆரம்பங்களுடன் நம்பயணம் தொடங்கிற்று.

உன் கவிதைக்குள் என்னையறியாமலே நான் புதைக்கப்பட்டேன்.
நீயும் உன் கவிதையும் எனக்கும் என நீ கூறியதால்
உன் பெருங்கவிதையெனக்கு பலமென நம்பி
இறுதியில் உனக்குள்ளும் உன் கவிதைக்குள்ளும் சரணாகதியானேன்.

நீ எழுதிய வரலாற்றில் காலம் ஓடியது

உன் பெருநில கவிதையின் சொற்கள் மாறின
உன் நிகழ்ச்சி நிரல்கள் எங்கோ நிர்ணயிக்கப்பட்டன

உனக்குள் இருந்த ஆரம்பங்கள் தொலைந்தன.
எனக்கும் உனக்குமான காதலால்

நீ பலமடைந்த பொழுதுகளை மறந்தாய்
திடிரென என்னையும் நம் காதலையும் நிராகரித்தாய்
உன்னையே நம்பிய பாவத்திற்காய்
முஸல்லாவிலே பலிக்கடாவாக்கினாய்
எனது அறிவகங்களின் கற்பை அழித்தாய்

பாங்கிற்காய் உயர்ந்த குரல்களை அறுத்தாய்
நிர்வாணமாக்கி என் நிலத்திலிருந்தே துரத்தி
நடுத்தெருவிலும் அடர்ந்த காட்டிலும் விரட்டி விரட்டியடித்தாய்.

உன் அன்பின் பின்னரசியல்
இவ்வளவு வக்கிரமென நான் நம்பியிருக்கவில்லை.
நீயடித்த அடியில் என் காதல் போதை கலங்கியது
நானும் நீயும் வேறென அறிந்தேன்.

தேடிப்பார்த்த போது
உனக்குமெனக்கும் வெகு தூரம்.
நீ காட்டிய காதல் பொய்
நீ கூறிய உலகம் பச்சப்பொய்
நீ நிறுவிய அனைத்தும் பொய்
நீயெழுதிய வரலாற்றில் பொய் மாத்திரமே உண்மை.

என் வலிகள் என்னைத்தேடியலைந்தன...

நீ வேறு நான் வேறு

எனதும் உனதும் மொழிகள் வேறு
எனதும் உனதும் பொழுதுகள் வேறு
எனதும் உனதும் சூரியனும் சந்திரனும் வேறு
எனதும் உனதும் நாட்களும் நிமிடங்களும் வேறு
எனதும் உனதும் கவிதைகளும் பாடல்களும் வேறு

எனதும் உனதும் மொத்தமும் வேறு வேறு.
நீ விரட்டும் போது உனக்கு நான் வேறு
அதை நான் கூறும் போது

உன் வன்முறையெனக்கு மீது.

நிச்சயமாக,
எனதும் உனதும் அனைத்தும் வேறு
நம் நன்றிகள் கூட வேறு
நமது கவிதையும் பாடலும் வேறு வேறு என்பது போல.


பர்ஸான் ஏஆர்

என்னிடமிருந்த வண்ணாத்திகள் சிறகுகள் கொடுக்கப்பட்டு பறந்தன.

காற்று நடந்து சென்ற மென்தடயங்களின் மேலே
கொஞ்சம் கொஞ்சமாக கால் பதித்து
என் வண்ணாத்திகளின் நிழலில் பிரயாணப்பட்டேன்.

என்னிடமிருந்த வண்ணாதிகளின் ஒரு சோடியின் நிழல்
மெல்லிய நீலமாய் அகன்று இருந்தது.

நீண்ட தூரங்கள் கடந்துசென்று
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்
ஒரு கரையில் அதுவிட்ட நுரையில்


ஒரு சோடி வண்ணாத்திகளின் நீலநிழல் அழகாய் படர்ந்தது.

வண்ணாத்திகள் ஓய்விற்காய் ஒதுங்கிய பொழுதன்று
மழைக்கு சொந்தமாய் விதிக்கப்பட்டது.

வண்ணாத்திகள் கூட்டம் எல்லைகளுக்கப்பால்
நீண்டு பயணிக்க விதிக்கப்படுகையில்
ஒரு சோடி வண்ணாத்திகள் மட்டும்
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்
நீல நிழலின் அழகில் நின்றது.

காற்றின் வேகத்தினில் நுரையில் விழுந்த நீல நிழல்
உறுதியாய் நிலைக்குமாறு இறைவனின் விதியமைக்கப்பட்டது.

நிறங்களுடன் பெய்த பெருமழையில்
கறுப்பின் வர்ணங்களிற்கு கூடிய ஆசனங்கள்.

நீல நிழல் நிலைக்க ஒரு சோடி வண்ணாத்திகளின்
ஓய்வுப்பொழுது மழைக்கு விதிக்கப்பட்டது
சிறிய கடலின் நீண்ட வெளியில்
என் ஒரு சோடி வண்ணாத்திகளின் ரூஹ{ பிரியுமாறும் எழுதப்பட்டது.

பர்ஸான் ஏஆர்

-------------------------------------------------------------------------------------------------
எனக்குத் தெரிந்த காகம்

காகம் கறுப்பு நிறம்
உள்ளம் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும்
இப்படியாக எனக்குத் தெரிந்த காகம் ஒன்று
தன் சகாக்கள் கூடுகட்ட
அகிலமெல்லாம் அகலப் பறந்து
அலகில் குச்சி கொத்திக் கொண்டு
வந்து கொடுக்கக் கண்டிருக்கிறேன்
என்ன பரிதாபம்!
அன்றொரு நாள்
தெரு நடுவில் சிறகொடிந்து
நெஞ்சம் படபடக்கும்படியாய்க் கிடந்து பதறுகிறது
அதே நிறமுடைய கறுத்தக் காகங்கள் எல்லாம்
கண்டும் காணாதது போல் உயரப் பறந்து
கடந்து செல்கின்றன
அவற்றின் உள்ளங்கள் தத்தம்
நிறத்தை ஒத்ததாயிருக்க வேண்டும்
சிறகொடிந்து கிடக்கும் இந்தக் கறுத்தக் காகத்தை தவிர

பஷ்றி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவள் சற்று தள்ளி உறங்கிய இரவு

நள்ளிரவு
உறக்கத்தை ஒரு எலி கொறித்துக் கொண்டிருக்கின்றது

கடிகாரம் சுவாசிக்கும் ஓசை
மிகுந்த அச்சமாய்
அறையில் பரவும் மெல்லிய வெளிச்சத்தை விழுங்கிறது
நான் நம்பிக்கை இழக்கிறேன்
இன்றிரவு
அவள் சற்று தள்ளி உறங்குகிறாள்

மூச்சையாகிக் கிடக்கிறது படுக்கை
பெரும் வெளியாய்
இரவு நீண்டு கொண்டு செல்லும் பாதை வழியே
விழியின் கால்கள் நகர
உறக்கம்
அவளது காலடியில் ஒரு பூவாய் உதிரும்.

அவள் சற்று தள்ளி உறங்கிய இரவின் சிறகுகள்
இன்னும் பறக்கவே இல்லை

எம். நவாஸ் சௌபி

கொடுரத்தின் வண்ணங்கள்

இன்றிரவு உனது முகத்தை வரைந்தேன்
வரைந்த முகத்தின்
வண்ணங்களை காட்டுவதில்
நீ தென்படுகிறாய்
அது நேர்த்தியான ஒரு வண்ணத்தினால்
ஆனதல்ல
வண்ணங்களை எழுதுவதில்
வார்தைகள் எதுவும்
அந்தி வண்ணங்களில் இல்லை

எம். நவாஸ் சௌபி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பூர்வீகக் காதல்

சுவாச நாதியறுந்து கழிகின்ற
இருப்பை பாடிக்கொள்ளும்
இந்த இல்லாமைக் காற்றின்
இயலாமைத் தடங்களை வருடுகிறேன்.

இத்தனை நாட்களுக்குப் பின்னும்
பூர்வீகம் பற்றி
எழுத நினைக்காத குறிப்பினை
மனனமிட்டு விசும்புகிறேன்.

என் தலையை உசுப்பிவிட்டு
எனக்குள் வெடித்து கதறுகிறது
இல்லாமல் போன வசந்தகால கனாக்கள்…

அகாலத்தில் விழுந்துள்ள தேசத்தில்
மரணத்துடன் கனன்று கொண்டிருக்கிறது
வாழ்க்கை…

பெருமழைக்குப் பின்னும்
அரும்பும் சருகுகூட
சிறு துளி ஓலமிட
இந்தக்கணத்தே
விசாரணை செய்யும்…?

மூடிய இமைகளின் இடுக்கில்
பேய் வாசம் வீச
வாசல்களில்
எதிரே அமர்ந்தவரின்
மரணச் சேதியினை
யாரினி அறிவிப்பினரோ…!

பத்திரிகைகளில்
உண்மைகள் பற்றி
ஊன்றி எழுத
தீர்ந்துபோனது பாதியில்
எழுதுகோலின் வலு…

கறுப்பு வெள்ளை
காட்சிகளின் கதையாடல்களில்
தணிந்தன
பூர்வீகக் கனவுகள்

என் பூர்வீகம் இல்லையென கருதும்
உன் முழு இருப்பும்
வேதனையளிக்கிறது.


திசை தவறி
சுழலும் இரவின் மௌனத்தில்
ஒலிக்கிறது
இன்னொரு மனிதனின்
இறுதி உரையாடல் மொழி.

சாந்தம் கவியும்
என் பிம்பத்தினையும்
பூர்வீக வேட்கையினையும்
எனது விளிம்பினையும்
ஒரே எத்தணிப்பில்
வரைந்து கொடுக்கும்
உனது துரிகைக் கோடுகளின்
அகலத்தை அளவிடு…

எனது முகத்தில்
உனது எச்சில் சீறுகிறது…

நீ ஆயுதத்தை தூக்கு முன்
சிந்தக் காத்திருக்கிறது
எனது குருதித் துளிகள்.

போரின் வடுக்களை சிந்தித்து
மனிதத்தை மூலதனமிடு
தேசத்தின் சுயத்தை காவலிட்டு
அபிவிருத்தியை அறுவடை செய்

வரலாறுகளாய் வகிபாடும்
எனது வேதனை வாழ்தலுடன்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
உனது தலைமைத்துவமும்
எனது பூர்வீக கனவுகளும்…

எல். வஸீம் அக்ரம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

விடிவின் உச்சியில்
இது அவ்வாறானதல்ல
நினைவுகள் அலசும் உலகம் பற்றியது
நிர்ப்பந்தமான காலங்களில்
நிர்ணயிக்கப்பட்ட சில நேரங்கள்
எம்மை பின்தொடரும்
அந்நாளில் எம் விடுதலை பற்றிய நினைவும்
முகமறியா நண்பரின் உதவியும்
ஒரு கணம் தேவைப்படும்
உருவகம் செய்யப்பட்ட சிந்தனைகள்
எம்முன் தோன்றி மறையும்
மனிதன் ஒருவனின் கூக்குரல் மூலமாய்
உலகம் விடிகிற கனம்
ரவைகள் தன்னியக்க சக்திகளை
வெளிப்படுத்தும் நாள்
கதவுகள் அடைக்கப்;படுகின்றன
ஜன்னல்கள் திறக்கப்பட்டு சிறுவர்கள் பார்க்கின்றனர்
வானம் சிவப்பு மழையை பொழிகின்றது
காகங்கள் அதில் நீச்சலாடுகின்றன
மழையின் அகப்பட்ட
ஒருவன் சிவப்பானான்
இரவோடிரவாய் ஊர் மாய்ந்து போகின்றது
மறுநாள்
சேவலின் கூக்குரல்
நீலவானம்
வெள்ளை மழை
மனித நடமாட்டம்

அஹமட் சாஜித்

2 comments:

இளைய அப்துல்லாஹ் said...
This comment has been removed by the author.
இளைய அப்துல்லாஹ் said...

ஆனால்
உந்தன் மீதான எந்தன் வன்முறைகள் தூங்கிடாது


வரிகள் மிகத்துல்லியமாக வந்து அமைந்திருக்கின்றன.

இளைய அப்துல்லாஹ்

Contact

Web:
www.peruveli.blogspot.com & www.peruveliethal.wordpress.com

Email:
perueliethal@gmail.com, peruveligroup@yahoo.com , peruveli@hotmail.com