Wednesday, August 27, 2008

பெருவெளியில் பேசுவோம்


History Repeat itself, first as tragedy second as farce
- karl Marx -

ரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இரண்டு சிறுபான்மை சமூகங்களினாலும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட மாகாண சபை பற்றிய விடயங்கள் மீண்டும் பேசுபொருளாகி ருக்கின்றன. இன்று சற்று வேறு முறையாக உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனகதைபோல வடக்கு கிழக்கு துண்டாடப்பட்டுவிட்டதனால் மாகாண சபைத் தேர்தல் கிழக்கு வாழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு விடுவிப்பு என அரசினால் அரங்கேற்றப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது விளைந்த பாரிய மனித அவலங்களின் சுவடுகள் மறைவதற்கு முன்பே மக்கள் எதிர்பார்த்திராத தருணத்தில் தேர்தலை எதிர்கொள்ள அவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். போர்ப் பீதி, அகதி வாழ்வு, வாழ்க்கைச் சுமை, கருத்துச் சுதந்திர மறுப்பு எனும் பாரதூரமான நெருக்கடிகளுக்குள் சிக்குண்டிருக்கும் கிழக்கு மக்களுக்கு முன் மாகாண சபைத் தேர்தல் ஒரு கானல் நீர் போலவும் அல்லாமல் தீ போலவே காட்சி யளிக்கிறது. அண்மையில் இருக்கும் வல்லரசின் கட்டளைகளுக்கமைவாகவே இத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறதென JVP குற்றஞ்சாட்டி வருகின்றமை இத்தருணத்தில் கவனிப்புக்குரியது.

மனித உரிமை மீறல்கள் மூலமும் போர்க்காதல் அரசியல் மூலமும் உலக அரங்கில் செல்வாக்கிழந்துவரும் அதிகாரத்தரப்பு தனது நிலையை ஓரளவு முட்டுக் கொடுத்து உயர்த்தவும் தானும் ஜனநாயகத்தின் காவலன்தான் என மகுடமிட்டுக் கொள்ளவும் தேர்ந்தெடுத்த உபாயமே கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகும். இந்த மகுடம் சூட்டு விழாவில் தனது எண்ணப்படியே பூரண கும்பமும் முதல் மரியாதையும் தனது அணிக்கே கிடைத்து விட்டதெனும் முடிவினை எழுதிவிட அது தவியா ய்த் தவிக்கிறது. கிழக்கு மக்கள் தனக்குப் பின்னால் தான் இருக்கிறார்கள் என உலகின் கண்களுக்கு படங்காட்ட முனைகிறது. அந்த விருப்புறுதியை நிறைவேற்ற சிறுபான்மை அரசியல் வாதிகளை சூழ்நிலையின் கைதிகளாக்கி தனது நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்க வைத்திருக்கிறது அதிகாரபீடம்.

போட்டியின் முடிவுகள் முன் தீர்மானிக்கப்பட்டுவிட்டதைப் போன்றதொரு மன பாரத்தை சுமந்தபடியிருக்கும் வாக்காளர்களின் மௌனங்களுக்குள் எரிமலை கனன்று கொண்டிருக்கிறது. சோர் வுறும் மனநிலைக்கு தவிர்க்க முடியாததனால் மறு தெரிவுகள் ஏற்படுத்தப்படுவதுதான் ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என்பதனால் மறு திசையில் எதிரணியும் பலமாகவே களமிறங்கியுள்ளது. சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை தமது அரசியல் அபிலாசைகளை அடைய ஒற்றுமை அவசியம் என காலம்தோறும் கூறப்பட்டு வருகின்ற போதும் அவை சாத்தியமற்று போன மைதான் நிஜம். சமூகங்களின் உள்ளக கட்டுமானங்களுக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை ஆக்கபூர்வமாக ஒருங்கிணைப்பதில் முஸ்லிம் சமூகம் தோற்றுக் கொண்டிருக்கிறது. ஒற்றுமையின் பெயரால் பிளவுகளே வலியுறுத்தப்படுகின்ற கபடச் சூழ்ச்சிகள் நிரம்பியதாகவே முஸ்லிம் அரசியல் அரங்கு தென்படுகிறது.

சிறுபான்மை சமூகங்களுக்கெதிரான பேரினவாதத்தின் இரண்டு அணிகளின் பக்கமும் முஸ்லிம் சமூகம் சாய்க்கப்பட்டு வருகிறது. இரண்டு பேரினவாத அணிகளிலும் முஸ்லிம்கள் குழுமியுள்ளனர். அதாவது ஆபத்தான இரு அணிகளினாலுமே முஸ்லிம்களுக்கு விடிவு கிடைத்துவிடுமென அந்தந்த அணிகளிலுள்ள தொப்பி போட்டவர்கள் கூறுகின்றனர். இங்கு பரிதாபம் என்னவெனில் பிரச்சாரங்களையும் கருத்துக்களையும் முன்னெடுத்து வெளிப்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலைகள் ஏற்படுத்தப் படாமைதான். கெடுபிடிகளுக்குள்ளும் அதிகார பீடம் விதிக்கும் கட்டுப்பாட்டுக்குள்ளும் நியாயங்கள் அமுங்கிப் போய்விட்டன.

இந்தமுறை பிரச்சாரங்கள் இரண்டு முறைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. சமூகத்தின் உரிமைகள் பற்றிப் பேசுவோர் மக்கள் மேம்பாடு அபிவிருத்தி பற்றி மூச்சுவிடுவதில்லை. அபிவிருத்தியினை கோசமாகக் கொண்டிருப்பவர்கள் உரிமைபற்றி எதுவும் பேசமுடியாமலும் உள்ளனர். உரிமை விடயத்தில் எழுச்சி காட்டுவோர் கடந்த காலங்களில் தீர்வு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தை மேடைகளிலும் முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக ஆக்கபூர்வமாகச் செயற்பட்டார்களா? இனியாவது செயற்படுவார்களா? போன்ற கேள்விகள் எழுகின்ற அதேவேளை அபிவிருத்திக் கோசம் போடுவோர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழுகின்ற எல்லாப் பிரதேசங்களிலும் அம்மக்களின் முக்கிய தேவையறிந்து பணியாற்றினார்களா? அன்றியும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு யோசனைகள் பற்றி அவர்களின் நிலைதான் என்ன? தனித்தனி தேசங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் மாறிவிட்ட பிறகு அவர்களை ஒரு தேசமாக ஒருங்கிணைப்பது அசாத்தியமாகும். இவ்விடத்தில் ஐக்கியமும் அபிவிருத்தியும் காலாவதியான கோசமாய் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. அதாவது அபிவிருத்தி அரசியல் என்பது முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் நடவடிக்கைகளுக்கு முன்பிருந்த பழைய நிலையாகும். இனி உரிமை மற்றும் அபிவிருத்தி எனச் சிந்திக்கலாம்.

மூன்று தசாப்தங்களாகத் தொடரும் போரும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலையிலும் இடம்பெறவிருக்கின்ற தேர்தலில் பேரினவாத அணிகள்தான் களமிறங்கியுள்ளன. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை இரண்டுமே ஆபத்தானவைதான். சிறுபான்மையினருக்கெதிரான கடும்போக்குடைய பௌத்த இனவாதிகளும் தேசப்பற்று வங்குரோத்தாளர்களும் அதிகாரத் தரப்போடு கைகோர்த்து கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வெகுவாக கரிசணை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கிருக்கின்ற பணி குறைந்தளவு ஆபத்தானவர்கள் யார் என்பதை தெரிவு செய்வதும், அபாயத்தின் வேகத்தை தனிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுவதும்தான்.

பெரும் சீரழிவின் உச்சியில் நிலைநாட்டப்படவிருக்கும் மாகாண சபையும் அதன் ஆசன நிலைகளும் இச்சபையை சுமூகமாக இயங்குவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குமா என்பது பெரும் கேள்வியாகும். இரண்டு இனங்களுக்கிடையில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் மோதலும் போட்டியும் மூன்றாவது இனத்தின் துணையுடன் கிழக்கு மாகாண சபை எவ்வாறு வடிவமைக்கப் படப்போகிறது என்பதன் உள்ளேயே இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விளைவுகள் தெளிவ டைய வாய்ப்பிருக்கிறது.

- செயற்பாட்டாளர்கள்

No comments:

Contact

Web:
www.peruveli.blogspot.com & www.peruveliethal.wordpress.com

Email:
perueliethal@gmail.com, peruveligroup@yahoo.com , peruveli@hotmail.com