Tuesday, August 26, 2008

சினிமாப் பிரதி

SYRIANA

செய்தியின் பின்னுள்ள நிகழ்வு
- ஸனா முஹம்மத்

திரைப்படத் திறனாய்வாளர்கள் என்ற பண்புப் பெயருடன் புத்தகம் போட்டவர்களை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் இவர்களின் திறனாய்வுகள் திரைப்படங்களினைப் பற்றிய வங்குரோத்து முன் மாதிரிகளாகவே எனக்கு இருந்துள்ளன. என்றாலும் எதையோ செய்து கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிகழ்ந்து முடிந்ததாய்த்தான் கொள்ளலாம். இலங்கையைப் பொறுத்தவரை திரைப்படக் கல்லூரிகளோ அத்துறைசார்ந்த தொடர் நிகழ்வுகளோ இல்லை. இதற்கு திரைப்படத் துறையில் காணப்படும் அக்கறை, அக்கறையின்மை என்பன தாண்டி சந்தையையும் குறிப்பிட முடியும். மேற்கத்தேய அல்லது அண்மையிலுள்ள இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சிமிகு தாக்கங்கள் போல் திரைப்படச்சந்தை இலங்கையில் தோற்றம் பெறவில்லை. ஆயினும் சிங்கள திரைப்படங்களின் வருகையும் அவை பற்றிய உரையாடல்களும் தலைநகர் அண்டிய பகுதிகளிலே நடந்து முடிந்து விடுகிறது. அவைகள் ஏனைய பிரதேசங்களில் ஆக்கபூர்வமான உரையாடல்களின் தொடக்கமாய் திரையிடப்படுவதுமில்லை.

தொப்புளைக்காட்டி உச்ச கவர்ச்சிக்கான / வன்முறைக் கவர்ச்சிக்கான அனைத்துப் பண்புகளுடனும்தான் இந்திய திரைப்படங்கள் வரவேண்டு மென்ற கட்டாயத்தினை ரசனைச் சலவை மூலம் ரசிகர்கள் மீது திணித்திருக்கின்றனர். இடையிடையே எப்போதாவது நாம் திருப்திப் பட்டுக் கொள்ளும் ஒரு சில திரைப்படங்கள் தலை காட்டுகின்றன. ஆங்கிலத் திரைப்படங்களில் காணப்படும் கவர்ச்சிச் சந்தையினையும் விட இந்திய திரைப்படங்கள் மிக தாராண்மைகளோடு களத்தில் நிற்பதினை காண்கிறோம். இவை இன்று எதனை தம் கருப்பொருளாகக் கொண்டுள்ளன என்பதினை யாருமே ஊகிக்க முடியாமல் போய்விடுகிறது. கட்டாயமாக்கப்பட்ட ஆறு பாடல்களும் பதினாறு ஆடைகள் மாற்றும் குழு நடனமும் இல்லாமல் எந்தப் படங்களையும் வெளியிடமுடியாமல் இந்திய சினிமாத் தளம் நிற்கிறது.

இந்த நிலையினை கடந்து விட்டு ஹொலிவூட்டின் Warner bros pictures படைப்பாக Participant தயாரிப்பில் George clooney, Matt damon, Jeffrey wright ஆகியோருடன் Chris cooper, William hurt, Tim blake nelson, Amanda peet, Christoper plummer, Alexander siddig, Mazhar munir ஆகியவர்களின் சிறந்த பங்காற்றலுடன் வெளிவந்துள்ள திரைப்படம்தான் SYRIANA.

ஹொலிவூட்டின் பெரும்பாலான திரைப்படங்கள், எதிர்கொள்ளப் போகும் காலங்கள் பற்றிய பிரமிக்க வைக்கும் பார்வைகளுடன் வந்து கொண்டிருக்கையில், நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் தகவல்களுடன் உலகின் இன்றைய அரசியல் / வணிகத்தின் பின்னுள்ள கட்டமைப்புக்கள் பற்றி SYRIANA கதைத்திருப்பதுவே இத்திரைப்படம் பற்றி எழுதுவதற்கு காரணமாயிற்று. ஹொலிவூட்டின் பிரமிக்க வைக்கும் திரைப்படங்கள் அவற்றின் பின்னுள்ள தொழில்நுட்ப ரகசியம் பற்றியே அதிகம் கதைக்க வைக்கிறது. இதனூடாய் அந்தத் திரைப்படங்கள் ரசிகர்களை வேறு ஒரு திக்கிற்கு நகர்த்திவிடுகின்றன. அமெரிக்க அரசின் உளவியல் தூதர்களாகவே இத்திரைப்படங்கள் இருப்பதினை நம்மில் பலர் அறிந்து கொள்வது கஷ்டமாகும். இதன்மூலம் அமெரிக்க/மேற்கின் வணிகமற்றும் அரசியல் நலன் குலைந்து விடாமல் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது. இதற்குள்ளும் அமெரிக்க அரசியல் மீது பலமான அடிகளை விட்டவாறு ஒரு சில திரைப்படங்கள் வருகின்றனதான். அவ்வாறானதொன்றே SYRIANAவாகும்.

ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்ளாத அதிகாலையொன்றில் மத்திய கிழக்குப் பாலைவனத்தில் தொழிலிற்காய் முட்டி மோதும் ஆசிய இளைஞர்கள், அமெரிக்க கம்பனிகளின் வாகனங்களிற்குப் பதிலாக இந்தியாவின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்ற மிக இலேசான காட்சிகளோடு படம் ஆரம்பமாகின்றது. இஸ்லாம் கூறும், கூறாத சட்டங்களை மிகைப்படுத்தி அமுல்படுத்தும் ஈரானின் உட்கலாசா ரங்களை திடீரென தொட்டு நிற்கிறது திரைப்படத்தின் அடுத்த காட்சி. இந்த காட்சி உடைவுகள் படம் முழுவதும் இலகுவான பின் தொடர்புகளை பரப்பிக் கொண்டே நகர்கின்றன. அமெரிக்க உயை முகவரொருவரின் உண்மைக் கதையாக தொடரும் திரைப்படம் 20 வருட அவரின் உணர்வுகளின் வித்தியாசமான கோலங்களை எடுத்துக்காட்டுகிறது. தனது நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் தனது தொழிலானது நலன்களைப் பெற்றுத்தரும் என நம்புகிறார் Bob barnes. .

ஈரானிய களியாட்ட விடுதியில் ஆயுத விற்பனை ஒப்பந்தம் நடக்கிறது. ஒவ்வொரு நாட்டின் உள்ளக அரசியலையும் குழப்பி அதில் குளிர்காயும்
CIAயின் திட்டங்களை அமெரிக்காவினால் தீவிரவாதிகள் என அழைக்கப்படுபவர்கள் அறியாமலாவிடப் போகிறார்கள்? நவீன ஆயுதங்களை CIAதன் நோக்கத்திற்காய் ஈரானிய இளைஞர்களுக்கு விற்க திட்டமிடுகையில் அந்த ஆயுதங்கள் தீவிரவாத (இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும். வேறு அதற்கேயுரிய சொற்களைப் பயன்படுத்தும்போது மொழிக் குழப்பம் வாசிப்பிற்குத் தடையாக வந்து விடும் என கருதுகிறேன்). அமைப்புக்களிடம் சென்றடைகின்றன. இதனை அறியும் CIA முகவர் சக வணிகத்தில் ஈடுபட்டோரை உடனடி யாகவே குண்டு தாக்குதலொன்றின் மூலம் படுகொலை செய்கிறார். அனைத்து நாடுகளின் அரசியல், வணிகம் மற்றும் மண்ணாங்கட்டிகளையும் கைப்பற்றும் வெறியுடன் பித்துப்பிடித்து அலைந்து திரியும் அமெரிக்க அரசின் திட்டங்களை அமுல்படுத்துவது CIAதான். CIAஎதனை இதுவரை செய்துள்ளது, எதனை செய்து கொண்டிருக்கிறது, எதனை செய்யப் போகிறது? என்பது கூட CIAல் உள்ளவர்களுக்கே தெரியாத விடயமாக இருக்கிறது. இதற்குள் மத்திய கிழக்கு நாடுகள் நன்றாகவே அகப்பட்டுக் கொண்டதனை அவர்களே ஏற்றுக் கொண்டதை விட கேவலம் வேறேதும் இருக்க முடியுமா? எண்ணெய் மற்றும் இதர வணிகத்திற்காக யாரை அடுத்த மன்னராக தேர்ந்தெடுக்க வேண்டு மென்பதினை அமெரிக்க மக்கள், வணிகர்களிற்காக CIA மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டமே அற்ற திட்டத்துடன் கச்சிதமாக நடத்தி முடிப்பதனை SYRIANA மிக வெளிப்படையாக கூறியிருப்பது மிக முக்கிய மானதொன்று என நினைக்கிறேன்.

SYRIANA அமெரிக்காவிலிருந்து வெளிவந்தாலும் நடந்து முடிந்த அரசியல் படுகொலைகளை தைரியமாய் கூறுவது துணிச்சலே. இவ்வாறு
CIAன் கோபத்தைக் கிளறிக் கொண்டு ஹொலிவூட் சில திரைப்படங்களைத் தந்து கொண்டுதான் இருக்கிறது.

காற்றின் பயணம் போல கமராவும் காற்றோடு அலையவிடப்பட்டிருப்பதாய் SYRIANAவின் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிக லாவகமாக கமரா காட்சிகளை உள்ளெடுத்துக் கொண்டு திரையில் மருதாணிக் கோலம் போட்டுள்ளது. பல்வேறு விடயங்களை உள்வாங்கிக் கொண்டு நமது பார்வையின் எல்லைகளினை பெருப்பிப்பதை SYRIANA ஓரளவு செய்திருப்பதாய்க் கருகிறேன். உதாரணமாக அமெரிக்க வணிகத் தொடர்புகளிலிருந்து விடுபட்டு சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளினை தனது மூத்த மகனின் வழிகாட்டலில் மன்னர் ஆரம்பிக்கும்போது அமெரிக்க சார்பு இரண்டாவது மகன் தொலைக்காட்சியின் Remote controlவேலை செய்யாது விட அதனை சீனத் தயாரிப்பெனக் கூறுவதும் திரைப்படப் போக்கில் அழுத்தங்களின்றிய காட்சிகளி னூடாய் கூறிவிட்டு நகர்ந்து விடுகிறது.

நமது நாடுகளின் தலை விதிகளும், தேர்தல்களும் ஏதாவதொரு வெளிநாடொன்றிலுள்ள ஹோட்டல் அறைகளில் தீர்மானிக்கப்படுவதினை எவரும் எதிர்த்துக் கதைப்பதாகக் காணவில்லை அல்லது நமது அரசியல், இலக்கியங்கள் இதனை கதைப்பொருளாக பேசுவதாகவும் காணவில்லை. நாம் இன்னுமின்னும் எதற்குள் இருக்கிறோம்? நமது எண்ணங்களின் / திட்டங்களின் வீச்சு பற்றிய அச்சம்தான் நம்மீதான ஆக்கிரமிப்பின் முதல் செயற்பாடாய் உள்ளது. ஆனால் நம்மை வேறொருவர் அவரின் இலாபத்திற்காய் தீர்மானிப்பதையும் அல்லது அதனை ஜனநாயகத்திற்கான யுத்தமாக பறைசாற்று வதையும் War on terrorism என்பதாய் SYRIANAகூறியுள்ளது. தீவிரவாதிகள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பதினை சொல்லாமற் சொல்லும்
SYRIANA அமெரிக்க நலன்களை ஒட்டுமொத்தமாக குட்டிப் பணித்துவிடும் என எதிர்பார்க்கத் தேவையில்லை. தீவிரவாதிகளின் பின்னே தொழிலின்மையும் மேலோட்ட சமூக உணர்வுகளும் பெரும் பங்காற்றியிருப்பதாய் வெளிப்படுத்தும் பாத்திரங்கள் நடமாடவிடப் பட்டுள்ளன. மதரீதியான பிணைப்புக்களையும் தாண்டி வணிகத்தில் ஏற்படும் ஆக்கிரமிப்பு தீவிரவாதம் வளரக் காரணம் என்ற கதையினை SYRIANA ஒரு கட்டத்தில் பேசுகிறது. என்றாலும் அல்-குர்ஆனின் வசனங்களும், பள்ளிவாசல்கள், அல்-குர்ஆன் மத்ரஸாக்கள் தீவிரவாதக் குழுக்களின் பின்னேயிருப்பதாய் படம் நகர்கிறது.

அமெரிக்கா ஒரு செய்தியினை நமக்குச் சொல்கின்றபோது அதன் பின்னே இன்னொரு செய்தியும் பல தொடர் நிகழ்ச்சித்திட்டங்களும் மறைந்திருப்பதனைச் சொல்லாது. அமெரிக்க ஊடகங்களும் கூட அதற்கெனவே தமது நிகழ்ச்சி நிரல்களை ஏற்கனவே முழுமை செய்திருக்கின்றன. அதனது வழியில் சென்று இந்த ஊடகங்களை எதிர்கொள்ள முடியாததிற்காய் ஒட்டு மொத்தமாய் அதனை எதிர்க்கின்ற செயற்பாடே நம்மிடம் இருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் வளைகுடா பிராந்தியத்தின் துறைமுகமொன்றில் தரித்து நின்ற அமெரிக்க எண்ணெய்க்கப்பல் மீதான தற்கொலைத் தாக்குதலினையும் அதற்குப் பின்னிருந்த
CIAயின் அரசியல் தந்திரங்களி னையும் SYRIANA மிக இலேசான வர்ணமொன்றில் சொல்லி விட்டு போகின்றது. கப்பல் மீதான தாக்குதலிற்குப் பயன்படுத்தப்பட்ட அதி நவீன தற்கொலை ஆயுதம் CIAனால் ஈரானிய இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகும்.

ஜெனிவாவில் இருந்து வரும் தொலைக்காட்சியொன்றின் வர்த்தக நிகழ்ச்சி தொகுப்பாளரிற்கும் வளைகுடாவில் இருக்கும் மன்னரின் மகனிற்குமான தொடர்பு புதிய வணிக வழிகளை நோக்கிப் பயணிக்கிறது. அமெரிக்கா தனது வர்த்தக நலனிற்காய் வளைகுடா நாடுகளினைப் பிரித்தாண்டு கொண்டிருப்பதால் அந் நாடுகள் எதிர் கொள்ளும் வர்த்தக சவால்களையும், தங்கி நிற்கும் வணி கத்தின் நிலைக்களங்கள் பற்றியுமான உரையாடல் புதிய எண்ணெய் வர்த்தகத்தை மன்னரின் மகனிற்கு முன்னே வரைபடமாக இடுகிறது. ஈரானை குறுக்கறுத்து தன் துறைமுகத்திற்கு வரவேண்டிய எண்ணெய்க்குழாய் ஈரானுடனான முரண்பாடுகளினால் மிகத்தூரம் பயணித்து ஈரானைச் சுற்றி வருவதனால் ஏற்படும் மேலதிக வருமான இழப்பீடுகளை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மன்னரின் வர்த்தக ஆலோசகராக முன்வைக்கிறார். சுயமான வளைகுடாவின் வெற்றியினை அமெரிக்கா தனது இலாபத்திற்காய் தடைசெய்து புதைத்து வைத்திருப்பதினை SYRIANA மிக அழகிய மௌனத்துடனும் பாலைவனத்தின் சூட்டுடனும் சொல்லிவிட்டுப் போகிறது.

ஆனால், அமெரிக்கா வழமை போல முந்திக் கொள்கிறது. தனது எண்ணெய் வர்த்தகத்திற்காயும் உலகு மீதான வர்த்தக நலனை தொடராக தக்கவைத்து நாடுகளை உறிஞ்சும் படலத்திற்காயும் எவரையும் எப்படியும் என்னவும் செய்ய முடியுமல்லவா? இப்படியெல்லாம் செய்வதுதான் அமெரிக்காவின் தர்மம். அதனால்தான் உலகின் மீதும் உலகின் சட்ட ஒழுங்குகள் மீதும் அமெரிக்க அரசுக்கு அதி கூடிய அக்கறை. வளைகுடாவில் தனது வர்த்தக நலன் பாதிப்படையப் போவதினை அமெரிக்கா அறிகிறது. இதனிடையே CIA முகவர் ஈரானிய சார்பு இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். அதன்பின் அமெரிக்கா திரும்பிச்செல்கையில்
CIAயினால் கைவிடப்படும் இவர் மிகுந்த விரக்தியுடன் தன் துன்பங்கள் நிறைந்த 20வருட வாழ்வு கொடுத்த வலிகளையும் சோகங்களையும் மிகக் கொடுமையுடன் தாங்கிக் கொள்கிறார். தான் செய்யும் ஒரு நல்ல காரியமாக CIAயின் முயல்வுகளை குறித்த மன்னரின் மகனிடம் தெரியப்படுத்த முயற்சிக்கும்போது அமெரிக்காவில் இருக்கும் CIAயின் மிக முக்கிய ரகசிய இடத்தில் இருந்தவாறே வளைகுடாப் பாலைவனத்தில் ஆட்சிபீடக் குழப்பத்துடன் (மன்னர் வாரிசு இழக்கப்பட்ட நிலையில்) சென்று கொண்டிருந்த மன்னரின் மூத்த மகன் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாய் படுகொலை செய்யப்படுகிறார். அமெரிக்க சார்பு இரண்டாவது மகன் ஆட்சியைப் பொறுப்பெடுக்கிறார். தோல்வியடைந்த வளைகுடாவின் சுய ஆளுமையும் தீவிரவாதத்திற்கு எதிரானதும் வெற்றி பெற்றதுமான அமெரிக்காவின் வரலாறாய் திரைப்படம் முடிவடைகிறது.

இத்திரைப்படத்தின் இத்தனை நிகழ்வுகளும் நடந்து முடிந்த நிகழ்வொன்றினை மீண்டும் உங்கள் முன் கொண்டு வந்திருக்கும். ஆனால் நமக்கு கிடைக்கும் தகவல்கள்
CIAயின் நடவடிக்கைகளையன்றி அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதிகளின் தாக்குதல்களையே கூறியிருக்கும். இதேபோல்தான் நமது அன்றாட நிகழ்வுகளிற்குப் பின்னான திட்டங்களும் அமைந்து இருக்கின்றன. SYRIANAவின் காட்சியமைப்பிற்கு ஏற்ற ஒளியும் சூழலிற்கு ஏற்ற திரைநிறங்களும் திரைப்படத்துடன் இணைந்திருப்பதற்கு துணைபுரிகிறது. அதே போல்தான் ஒலியமைப்பும் மிக நுட்பமாய் பிணைக்கப்பட்டுள்ளது. Original DVDயில் பார்ப்பதில் இருக்கின்ற துல்லியத்தினை இதில் மிக அருமையாக அனுபவிக்கக் கிடைத்தது. அதனுடன் wide screen edition என்பதும் இன்னும் பிணைப்பின் அதிகரிப்பிற்கு காரணமாயிற்று. இலங்கையின் எந்த திரையரங்குகளிலும் SYRIANAதிரையிடப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை.

ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரும் சுய மீளலிற்கு எதிரான ஆக்கிரமிப்பும் இன்று வெவ்வேறு திசைகளினை பார்த்துக்கொண்டு எங்கோ இருக்கும் ஒரு சிலரின் இலாபத்திற்காய் இயங்குகின்றது. ஆனால், புதிய புதிய வழிகளில் அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் துவம்சம் செய்யும் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழில் நுட்ப அதி வினைத்திறன் இன்றைய ஆக்கிரமிப்புப் போரிற்கு மிக முக்கியமான ஆயுதமாகக் கொள்ளப்படுகிறது. இதனோடு இணைந்தது போல நமக்கு எதிரான புதிய ஆக்கிரமிப்பு நுட்பங்களை கண்டறிய வேண்டிய தேவை நமக்குள்ளது.

No comments:

Contact

Web:
www.peruveli.blogspot.com & www.peruveliethal.wordpress.com

Email:
perueliethal@gmail.com, peruveligroup@yahoo.com , peruveli@hotmail.com