Tuesday, August 26, 2008

மாற்றுக் கருத்து நிலவரம்

- மிஹாத்

சினிமா விமர்சனமென்பது ஊடகங்களில் இடம்பெறுகின்ற அறிவுஜீவி வேலையாக இன்று எமது சூழலில் ஒப்புவிக்கப்படுகின்றது. இதில் பங்கேற்கின்ற விமர்சகர்களின் பார்வையில் எல்லா ரசிகர்களும் குறைபாடுடையவர்களாகப் புனையப்படுகின்றனர். கீழ்மையான ரசிகர்கள் தரமற்ற திரைப்படங்களின் மேல் ஆர்வங் கொண்டலைவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விமர்சனப் போக்கானது சினிமாவையும் அதன் உற்பத்திக்கான வர்த்தக நிர்ணயத் தன்மைகளையும் தற்கால உலக நிகழ்வு மாற்றங்களையும் புரிந்து கொள்ளாததினால் ஏற்பட்டு விட்ட மனப் பிதற்றுகையாகவே கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட விமர்சகரானவர் தான் நோக்குகின்ற கோணத்திற்குள் நின்றபடியே ரசனை வெளியின் கடைக்கோடியிலுள்ள மற்றவனும் ரசிப்புக் கணிப்பில் ஈடுபட வேண்டுமென எதிர்பார்ப்பது கேணைத் தனமாகும். நடப்பிலிருந்த கலைக் கோட்பாடுகளெல்லாம் தகர்த்தெறியப்பட்டு விட்ட நிகழ்காலத்தில் நிரந்தரமான சினிமாச் சூத்திரங்களுமில்லை, ஒழுங்கு விதிகளுக் கமைவாகவே ரசனையும் இருக்க வேண்டு மென்ற தேவையுமில்லை. அந்த வகை எதிர்பார்ப்பைக் கோருகின்ற விமர்சனப் பார்வையானது சினிமாவின் எல்லையற்ற பல்வகை ரசிக்கும் பாங்கை கேவலப் படுத்துவதாகிவிடுகிறது.

இயல்பான மன எழுச்சி களும், எவரும் எதனையும் ரசிக்க இயலுமாகிப்போன இசைவான தொழில்நுட்ப வளர்ச்சியும் இணைகின்ற புள்ளியிலேயே தற்காலச் சினிமாக்கலை நிர்மாணம் பெறுகின்றது. இந்த அலை வரிசையினைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ரசனையாளர்கள்தான் சுயாதீன ரசிப்பு நிலைக் கெதிரான விமர்சன வன் முறையைக் கையிலெடுக் கின்றனர். இவர்களது விமர்சன முறையில் எப் பொழுதும் ஒழுங்கு விதி களைக் கோரும் இலட்சியவாத சினிமாக்களுக்கான ஏக்கம் தென்படுவதை அவதானிக்கலாம். தற்போதைய உலக நடைமுறையில் காலாவதியாகிப்போன பாசிச மயமான இவ்விமர்சனப் பார்வையை தமிழ் விமர்சக மனம் இன்றளவும் நினைவு கூர்வதனையே நாம் கண்டுஎ வருகிறோம். இலங்கையில் இருக்கின்ற திரைப்பட விமர்சன முறையினைக் கொட்டிப் பதரடித்தால் தமிழக எழுத்து மனம் அடியில் தேங்குவதனைக் காணலாம்.

இங்கிருக்கின்ற விமர்சனப் பாணியானது நான்கு வகையான அடிப்படைப் பண்புகளைக் கொண்டியங்குகின்றது.
1. திரைப்படங்களை அட்டவணைகளின் உதவியோடு தரப்படுத்தல்
A - கலைப்படங்கள் (Classic cinema)
B - இடைநிலைப் படங்கள் (Middle cinema)
C - மசாலாப் படங்கள் (Commercial cinema)

இவற்றில் பெரும்பாலும் கலைப்படங்களையும் மிக ஒரு சில இடைநிலைப் படங்களையும் தூக்கிப்பிடித்து உணாவுதல். இதன்மூலம் ஏனைய எல்லாத் திரைப்படங்களும் ஒதுக்கப்பட்டுவிடும். இவர்கள் விதந்து உருகும் பெரும்பாலான திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் ரசனைகளுக்குத் தூரமானவையாக இருப்பதுடன் உழைக்கும் மக்களின் மனங்களில் அதிகமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பண்பையும் கொண்டி ருக்கும். சிலநேரங்களில் இக்கலைப் படங்களோ, இடைநிலைப் படங் களோ விளிம்பு மக்களின் வாழ்வைக் கூடப் பேசலாம். ஆனால் சினிமா என்று வருகின்றபோது திரைப்படம் ரசிகன் என்கின்ற கேளிக்கை உறவுநிலை மட்டுமே குறுக்கீடு செய்வதனால் ரசிகனின் பிரியமான நுகர்பொருளாக பிரதி இன்பமே நிர்ணயம் பெறுகிறது.

2. தங்களது ரசனை வரையறைகளோடு பொருந்திவராமல் துருத்திக்கொண்டிருக்கும் பிற ரசிப்புத் தளங்களைக் கிண்டலடித்தல்.
வித்தியாசமான சினிமாக்களையோ அல்லது வேறான கலையம்சங்களையோ ரசிப்பதற்குச் சில வேளைகளில் மேலதிகமான உசாத்துணைத் தகவல் நுகர்வு வேண்டப்படுகிறது. அது எல்லா வட்டார ரசிப்பு முயற்சிகளுக்கும் கிட்டுவதில்லை. அது கிட்டாத ரசனையை குறைபாட்டுடன் நோக்குவதோ அன்றியும் பாடம் நடத்த முனைவதோ விபரீதம்தான். ஒவ்வொரு ரசிகனுக்குமிருக்கும் தனிப்பட்டதும் சுதந்திரமானதுமான ரசனையைக் கட்டுப்படுத்தாமல் வித்தியாசமான மனத்தேர்வுகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

3. குறிப்பிட்ட சில இயக்குனர்களின் நெறியாள்கையை மட்டும் பாராட்டுவதோடு ஏனைய இயக்குனர்களுக் கெதிராக வசைபாடுதல். சத்தியஜித்ரே, ஷ்யாம் பெனகல், கோவிந்த் நிஹ்லானி, மிருனாள் சென், சாந்தாராம் போன்ற சில பழைய வட இந்திய இயக்குனர்களையும், மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், சிபிமலயில், அரவிந்தன் போன்றவர்களையும் தமிழில் பாலு மகேந்திராவையும், சிலவேளைகளில் மகேந்தி ரனையும் மட்டும் விதந்து களித்தல். இதுபோல் பிறமேலைத்தேய சினிமாக்களிலும் அவர்களுக்குச் சில பட்டியலுண்டு. இங்கு குறிப்பிட்ட இயக்குனர்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் வித்தியாசமான சினிமா வடிவங்களை முன்வைத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட இயக்குனர்களுடைய படங்கள் மட்டுந்தான் சிறந்ததென மாரடிப்பதனை சகிக்க முடியவில்லை.

4. நல்ல சினிமாக்கள் வரவேண்டும், மக்களின் ரசனைகள் உயரவேண்டும் என்பன போன்ற ஏக்கங்களை வெளியிடல்.
இவர்களிடமிருக்கின்ற வெகுஜன மனங்களுக்குப் பொருந்தாத அளவுகோலின் அடிப்படையில் நல்லவை கெட்டவைகளென ஒருதலைப்பட்சமாகப் படங்களைத் தரம்பிரித்து நாட்டாமைத் தீர்ப்பு வழங்கும் விமர்சனப் பிரசங்கம் கண்டிப்புக்குரியது.இந்தவகை விமர்சன முறையின் பின்னாலிருக்கும் அரசியலைக் கூர்ந்து நோக்கினால் தெரியவருபவை
I. பண்டிதத் தன்மையை வெளியிடும் விருப்புறுதி
II. மக்கள் சீரழிகிறார்களென்ற மனக்கவலையும் குற்ற உணர்ச்சியும்
III. சமூகம் திருந்தவேண்டுமென்கின்ற அக்கறை

இந்த உள்ளீடுகளின் குழப்பத்தினை தீர்க்கமாக ஆராய்ந்தால் அதிகாரத்துவம் மிக்க ஒரு வகை மனவிகாரமே காரணமெனக் கொள்ளமுடியும். சாருநிவேதிதா போன்ற விமர்சகர்களை இங்கிருப்பவர் களோடு பொருத்திப் பார்க்க முடியாது. ஏனெனில் சாருவின் ரசனையானது உலகிலுள்ள ஏராளமான சினிமா வகைகளை விரிவான ருசிப்புத் தன்மையோடு உள்வாங்கிக் கொள்கிறது. இங்கிருப்பவர்கள் அப்படியல்ல. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்ப வர்கள். எமது வாசிப்புச் சூழலானது இங்கிருக்கின்ற விமர்சனத் தன்மைகளை தனி ஒருவரது வேட்கையின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ளக் கூடியது. ஆனால் இங்கிருக்கின்ற விமர்சகர்கள் தமக்கொரு மொத்தத்துவ அந்தஸ்தைத் தேடிப்பெறும் அவாவை உள்நிறுத்தி சமூகப் பிரேமைக் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இங்கிருக்கும் pseudo iconகளாக உமா வரதராஜன், சிவகுமார், சிராஜ் மஷ்ஹூர், மாரிமகேந்திரன், ஆத்மா, குர்சித் போன்றவர்களைக் குறிப்பிடலாம். தங்களது விமர்சன முறையின் உயரங்களை நிறுவுவதற்கு சில உலகத் திரைப்படங்களையும் இயக்குனர்களையும் இவர்கள் துணைக்கழைக்கத் தவறுவதில்லை. ஒருமுறை அரச தொலைக்காட்சியின் சிறுவர் தினச் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் தோன்றிய சிராஜ் மஷ்ஹூர் சினிமா பற்றிய இலட்சியங்களை வெளியிட்டு ஈரானிய சினிமாவினையும் விதந்து பேசினார். ஈரானிய திரைப்படங்கள் வெகுவாக ரசிக்கப்படக் கூடியவை யென்பது வேறுவிடயம். ஆனால் அந்நிகழ்ச்சியில் அவர் Majid Majidi யின் The colour of paradise எனும் திரைப்படத்தைச் சிறுவர் திரைப்படமாக முன்வைத்துப் பேசியமை நகைச்சுவையாகவே இருந்தது.

சிறுவர் திரைப்படமென்பது சிறுவர்களின் உலகோடு உறவாடும் செயற்தன்மை கொண்டது. சிறுவர்களின் மனவெளியினுள் இயல்பாக நுழைந்து சஞ்சரிக்கக் கூடியவை. சிறுவர்களினால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவை. இவற்றினைக் கொண்டிருக்காத மேற்கூறிய படத்தினை சிராஜ் சிறுவர் திரைப்படமென வகைப்படுத்தியமை வியப்பானது. The colour of paradise, The children of heaven மற்றும் Rain (baran) போன்ற படங்களிலெல்லாம் சிறுவர்கள் மையநிலைப் பாத்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சிறுவர்களின் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை வடிவமைக்கப்படும் படங்களெல்லாமே சிறுவர்களுக்கான சினிமாவாகிவிட முடியுமா? சிறுவர்களின் உலகங்களை பெரியவர்களின் ரசனைக்கேற்ற வகையில் காட்சிப்படுத்தும் உளவியல் தன்மைகளைக் கொண்ட இப்படங்கள் பெரியவர்களி னாலேயே விருதுகளுக்கும் சிபாரிசு செய்யப்பட்டவை. குறித்த படங்களை வீடுகளில் சிறுவர்களுக்குக் காண்பித்தபோது அதன் கதைப்பின்னலுக்குள் குழந்தைகளின் கவனங்கள் சிக்கவேயில்லை.

ஒருமுறை சூரியன் வானொலியின் ஒலிப்பதிவு கூடத்தில் ரஜினியின் பிறந்தநாள் விசேட நிகழ்ச்சியொன்றிற்கான ஒலிப்பதிவில் மப்றூக்குடன் இருந்தபோது தொலைபேசியில் கருத்து தெரிவித்த உமா வரதராஜன், ''கிழட்டு ரஜினி இன்று இளமையான வேடங்களில் நடிப்பதை அருவருப்பாக உணர்வது போல'' பேசினார். வரையறுப்புகளுக்குள் சிக்குண்ட அவரது அரைகுறை மனப்பதிவுகளின் பீடிகைகளை எண்ணிச் சலிப்புற்றேன். சினிமாவில் வேடங்களுக்கும் வயதுக்கும் பொருத்தம் பார்ப்பது விபரீதமான வேட்கைதான். அதுமட்டுமல்லாமல் வயதுக்கேற்ற பாத்திரங்களை ரஜினி தெரிவு செய்யாவிட்டால் அவரிடமிருக்கும் மந்தைகளை விஜய் மேய்த்துக்கொண்டு சென்று விடுவாரென ரஜினிக்குப் புத்திமதியும் கூறியவர் வெகுஜன சினிமா ரசிகர்களை ஏளனமும் செய்தார். பலகோடி மக்களை மகிழ்விக்கும் கூத்தாடியாக ரஜினியை அவர் காணவில்லை. அவரது இருள் சூழ்ந்த மேதாவிலாசத்தின் பார்வையில் ரசிகர்கள் மந்தைகளே. ''நெற்றிக்கண்'' படத்தில் இளைஞனான ரஜினி வயதானவராக நடித்தபோது ஊரிலுள்ள கிழவிகளெல்லாம் அவர் பின்னால் சென்று விடுவார்களோவென முன்பு ஏன் உமா அங்கலாய்த்திருக்கவில்லை?

பிரவாகம் நிகழ்ச்சியில் ஒருமுறை 'veer zara' படத்தின் சில காட்சிகளை ஒளிபரப்பி தனது நிகழ்ச்சியின் பெரும்பாகத்தை ஒப்பேற்றிய தொகுப்பாளர் ஆத்மா, ''இதுபோன்ற திரைப்படங்களை எவரும் பார்க்கக்கூடாது என்பதற்காகவே சில காட்சிகளை காண்பித்தேன்'' என்று கூறினார். பெரும் பொருட்செலவில் Yash chopra உருவாக்கி உலகின் பல பாகங்களிலும் ரசிக்கப்பட்ட இப்படத்திற்கு வடிவேலு பாணியில் ஆத்மா கொடுத்த அலப்பறை விளக்கத்தினை தாங்க முடியவில்லை.

திரைப்படங்களை பெருந்திரையில் DTS ஒலி அமைப்புக்களுடன் பார்க்கும்போது ஏற்படுகின்ற அனுபவமும் குறுந்திரையில் பார்க்கின்றபோது ஏற்படுகின்ற அனுபவமும் வித்தியாசமானவை. குறுந்திரையில் பார்க்கப்படுகின்ற சினிமாவானது பெரும்பாலும் ரசிகனுக்குப் பூரிப்பை ஏற்படுத்துவது குறைவாகும். சினிமா பார்ப்பதன் நோக்கம்தான் என்ன? முழுக்கவும் கேளிக்கை அடிப்படையிலேயே சினிமாத் தன்மை மாறிவருவதனை குற்ற உணர்ச்சி மிக்க மனது டன் நோக்குவது பரிதா பத்திற்குரியது. அநேகமாக எல்லா நாடுகளிலும் திரைப் படங்கள் தயாரிக்கப்படுகிறது. அவை பல்வேறு உருவாக்க உள்ளீடுகளையும் வெளிப்பாட்டு முறைகளையும் கொண்டிருக்கின்றன. அன்றியும் அது முதலீட்டுடன் கூடிய வர்த்தகமாகவும் நிலைகொண்டு விட்டபோது பல்வேறு வகையான போக்குகளுடன் இயங்கும் கேளிக்கைப் பண்புகளை உள்ளீர்த்துக் கொள்கிறது. இந்த வேளையில்தான் மந்த கதியில் நகரும் காட்சி களினாலும் திரைக்கதையினாலும் ஜோடிக்கப்பட்ட படங்களை மட்டுமே உயர்ந்தவை எனக் கொண்டாடும் பண்டித விமர்சன வழக்கு கேள்விக்குள்ளாகிறது.

இங்கிருக்கின்ற சினிமாப் பண்டிதர்களில் பெரும் பாலானவர்களை அவ்வப்போது அரிதாக இடம்பெறும் திரைப்பட விழாக்களில் கூட காண முடிவதேயில்லை. உலகின் அபூர்வமான திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு எப்படிக் கிட்டுகிறதோ? வித்தியாசமான திரைப்படங்கள் எல்லாமே DVDகளிலும் கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் ஊடகங்களில் திரைப்பட மேதாவித் தனங்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கும்போது ''கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டும்'' என்னும் கதை ஞாபகம் வருகிறது.

சினிமாவென்பது பொய்மைகள் மீது உண்மை போன்றதொரு மாயையை நிர்மாணம் செய்யக் கூடிய தான புனைவை நிரற்படுத்தி இயங்கிக் கொண்டிருப் பவை. இதில் ஒழுங்கு முறைகளை முன்னிறுத்தி ஏன் விமர்சனச் சாபங்கள் புரிய வேண்டும். வாழ்வை சினிமாவிலும், சினிமாவை வாழ்விலும் இடம் மாற்றித் தேடும் மனப் பிறழ்வில்தான் அநேக விமர்சன முறைகள் நகர்கின்றன. ஒரு ரசிகன் விமர்சனங்களின் அடிப் படையில் படத்தினை ரசிக்க வேண்டுமென்ற எந்த விதமான அவசியமும் இல்லை. ஆனால் விமர்சனங்களின் பிரத்தியேகமான அரசியலை குறிப்பிட்ட படங்களின் மீதேற்றி வாசிப்புச் செய்தலும் வித்தியாசமான அனுபவம்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சென்னையிலிருந்து நாட்டுக்கு வந்திருந்த எழுத்தாளரும் உதவி இயக்குனருமான நண்பர் ஹசீன் ''city of god படம் பார்த்திருக்கிறீர்களா?'' எனக் கேட்டார். அந்தப்படம் கோடம்பாக்கத்தை கடுமையாகப் பாதித்திருப்பதாகவும் அந்தக் கதை உத்தியை பின்தொடரும் சினிமாக் கலைஞர்கள் பெருகி வருவதையும் குறிப்பிட்டார். BRAZILல் உள்ள நெரிசல் மிக்க சேரிப் புறத்தில் அத்திரைப்படத்தின் கதை நிகழ்கிறது. அதன் பிரதான பாத்திரம் cidade de deusஎனும் ஏழைக் குடியிருப்புப் பகுதியேயன்றி எந்த நபருமேயில்லை. 1980களின் ஆரம்பத்தில் போதைப் பொருள் பாவனையிலும் குற்றச் செயல்களிலும் மிதமிஞ்சிய பயங்கர நகரச்சேரியில் சட்டமும் ஒழுங்கும் போதைப் பொருள் தரகர்களான டீனேஜ் சிறுவர்களிடமும் ரவுடிக் கும்பல் களிடமுமே இருந்தது. மரண அச்சுறுத்தலும் வன்முறையும் ததும்பும் சூழலில் வளரும் சிறுவர்களின் வெவ்வேறு பாதைகளை பேசுகிறது அப்படம். அக்கதை தமிழ் நாட்டுச் சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவனிக்கப் படவேண்டும். BRAZIL சேரிகளினதும் தமிழ்நாட்டுச் சேரிகளினதும் வாழ்வியலிலும் கதைகளிலும் உள்ள உணர்ச்சிகளில் ஒத்த தன்மையொன்று காணப்படுவ தாகவும் அதுதான் இந்தப் பாதிப்புக்குக் காரணம் எனவும் சமாளிக்கப்படுகிறது.

விளிம்பு நிலைச் சேரிப்புற மக்களின் வாழ்வு பற்றிய கதைகளையும் அதன் ஆழமான கூறுகளையும் முழுமை யாகவும் விளக்கமாகவும் திரையில் எடுத்தாள முன்பிருந்த இயக்குனர்கள் தயங்கியதுண்டு. மேல்நிலைச் சமூக மாந்தர்களையும் அவர்களுக்கான அற விதிகளையும் ஒழுங்குபடுத்தும் கதை உத்திகளிலேயே அப்போதைய இயக்குனர்கள் காலந்தள்ளினர். பாரதிராஜாவின் படங்களோ வடிவ ரீதியில் கிராமிய வாழ்வியலை மேலோட்டமாக மேல்தள மக்களுக்கு ஏற்றவகையில் முன்வைத்ததேயொழிய ஓரநிலைப்படுத்தப்பட்ட மக்களின் குரல்களை உயர்த்தவில்லை.

இந்த எல்லைகளிலிருந்து விடுபட்டு நகரங்களை அண்டிப் பிழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிரதான கதைமாந்தர்களாக்கி திரைக்கதை அமைக்கும் தைரியத்தினை புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழங்கியுள்ள படமாக city of godக் கூறலாம். ஈ, புதுப்பேட்டை, பொல்லாதவன், அஞ்சாதே எனப் பல படங்களின் கதைகளுக்கான போசணை city of gody இருந்து பெறப்பட்டாலும் அவை தமிழ்ச் சூழலுக்கேற்ற வகையிலும் அடித்தள மக்களுக்குச் சமீபமாகவும் இருப்பதாக பேசப்படுகிறது. இப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் கலைந்த வாழ்வு முறைகளைக் காட்சிப் படுத்துவது மட்டுமல்லாமல் வணிக ரீதியிலும் திரை உலகின் சகல வகையான ரசிப்பு வாட்டாரங்களிலும் சாதனை படைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மாமூலான ஒழுங்குகளிலிருந்து விடுபட்ட கதைசொல்லல் முறையினையும் வித்தியாசமான பாத்திர வடிவமைப் பினையும் மைய ஓட்ட சமூக விழுமியங் களுடன் சமரசப்படாத திரைக்கதைகளையும் இப்படங்கள் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி இரண்டு மணிநேரம் வெளிநிகழ்ச்சி நிரல்களை மறந்து விறுவிறுப்பான பதட்டத்துடன் படம் பார்க்கும் ஆர்வத்தினையும் ஏற்படுத்தும் இவற்றின் மற்றொரு அம்சமும் கிளர்ச்சி யூட்டுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹீமாஜஹான்


முதலில் பெருவெளி இதழ்-4 ஐ அனுப்பிவைத்த நண்பனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசர வாசிப்புக்கான சாத்தியங்களை இழிவளவில் கொண்ட இவ்விதழ் ஓய்வு கிடைக்காத ஒரு காலப் பகுதியிலேயே என்னை வந்தடைந்தது. அதில் உள்ள பிரதிகளில் வாரத்துக்கு ஒருபிரதி என்ற அடிப்படையிலே வாசிப்புச் செய்யக் கூடிய அவகாசம் கிடைத்தது.

ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்களுடனான உரையாடலை மிகவும் ஆர்வத்துடன் படித்தேன்.அவரிடம் முன்வைக்கப் பட்டிருந்த கேள்விகளைத் தனித்தனியே ஆய்வுக் குட்படுத்தி எழுதக் கூடிய நூற்களின் தலைப்புக்களாக மாற்றமுடியும்.
1. அறபு மதரஸாக்களின் பாடத்திட்டங்களின் மறுசீரமைப்பு
2. நாகரிகங்களுக்கிடையிலான உரையாடலும் முஸ்லிம் சமுகமும்
3. முஸ்லிம் தேச இலக்கியமும் பின்னவீனத்துவமும்
4. முஸ்லிம் தேசப் பெண்ணியம்
5. முஸ்லிம் அரசியல்
6. முஸ்லிம்களும் ஊடகமும்

நமது புலமைவாதிகளின் செயற்பாடுகள் அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்குள் பெரும்பாலும் தங்கிவிடுகின்றன.இத்ரீஸ் அவர்கள் அதற்கப்பாலும் செயற்பட்ட பொழுதும் அவை விரிவான தளத்தில் சமுகத்தை வந்தடையவில்லை. மேலே குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றைப் பற்றியாவது அவரது விரிவான எழுத்து முயற்சியொன்று வெளிக்கொண்டுவரப்படுமா?

“மரணத்துக்குப் பின்னரான கொலை மற்றும் தற்கொலை” கதைப் பிரதி புதிய அனுவத்தைத் தருகிறது.வழமையான கதைகூறும் முறையிலிருந்து விடுபட்டு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய மொழியுடனும் அழகியலுடனும் நகர்த்தப் பட்டிருக்கிறது. அவ்வாறே பாலைநகர் ஜிப்ரியின் கதைப் பிரதியும் புத்துணர்வைத் தருகிறது. கவிதையைப் போன்ற படிமங்கள் அந்தப் பிரதிக்கு வலுச் சேர்த்துள்ளது. கவிதையைப் போலவே மீண்டும் மீண்டும் படிக்கக் கூடியதாக இரண்டு பிரதிகளும் அமைந்துள்ளன.

“முஸ்லிம் தேச இலக்கியம்-மேலெழுந்துவரும் கடும் போக்கு விவாதப் பொருள்” மிகப் பரந்த ஆய்வுக்குற் படுத்த வேண்டிய விடயங்களை மேற்கிளப்பி விட்டுள்ளது. அவ்வாறே பர்சானின் “பின்நவீனங்களு டனான முஸ்லிம்தேசம்” பிரதி பல விடயங்களைத் தெளிவு படுத்துகிறது.

எல்லாச் சமுகங்களும் நவீனத்தை நோக்கிப் பயணிக்கும் பொழுது நாம் எமது மூல வேர்களைத் தேடிப் பயணிக்கப் போகிறோமா? இதனைத் தான் “இஸ்லாத்திற்குத் திரும்புதல் என்பது ஒரு பின்னவீனத்துவ நிகழ்வு. இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய காலங்களில் நிகழ்ந்த தேசிய மற்றும் உலகலாவிய வளர்ச்சியின் விளைவால் உருவான அழுத்தங்களுக்கான பதில்” என்று குறிப்பிடுகிறார்களா?

ஒரே தாய் மொழியைப் பேசியபொழுதும் பெரும்பான்மை, சிறுபான்மையாகக் கூறாக்கப்பட்டுள்ள நிலையில் இலக்கியத்திலிருந்து பிரிந்து செல்ல முற்படுவது அல்லது தமக்குள் முரண்படுவது என்பது மேலோட்ட மான ஒரு கருத்து நிலையல்ல. பலகாலம் தமை அழுத்திய அநீதிகளுக்கான எதிர்ப்புணர்வாகவும் இதனைக் கருதலாம் என நினைக்கிறேன். அரசியலும் சிறுபான்மை யினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதமும் இதில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.

தமிழ் இலக்கியத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முஸ்லிம் தேச இலக்கியம் நகரும் வேளை அதிலிருந்து விலகி நிற்கும் முஸ்லிம் எழுத்துச் செயற் பாட்டாளர் மீது விரோத உணர்வு கொள்வது நியாயமானதா? எம்.ஏ.நுஃமான் அவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இத்தகைய ஒரு சாய்வுடன் அமைந்திருப்பதைக் காணலாம். எம்.ஏ. நுஃமான் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு எமது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிப்பேச முடியாதிருப்பது கூட அவருடைய ஆளுமையையே சுட்டுகிறது.

ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுத்துகின்ற முஸ்லிம்கள் தொடர்பில் ‘முஸ்லிம் தேச இலக்கியம்’ என்பதைப் பிரயோகிக்க முடியுமா? அவ்வாறே தமிழ் கலாசார பண்பாட்டு அடையாளங்களுடன் எழுதப் பட்ட முஸ்லிம்களின் எழுத்துப் பிரதிகள் மீதும் மௌனம் சாதிக்க வேண்டியுள்ளதல்லவா?

தமிழ் இலக்கியச் செயற்பாடுகளிலிருந்து முஸ்லிம்கள் தனியே பிரிந்து செல்லும் பொழுது அரசியலில் தனிமைப் பட்டதைப் போலவே இலக்கியத்திலும் தனிமைப் படவேண்டிவரும். அறபுத் தமிழ் இலக்கியங்களைப் போலவே சமயம் சார்ந்த வட்டத்துக்குள் அவை நின்றுவிடக் கூடுமல்லவா? நவீனத்துவத்தின் செல்வாக் கிலிருந்து விடுபட்டு பின்னவீனத்துவச் சார்பு நிலையை எடுக்கும் பொழுது நமது தனித்துவங்களைப் பேணவேண்டிய அவசியம் வருமல்லவா? அவ்வாறு தனிமைப்படும் போது எமக்குள் ஒரு பலமான எழுத்து இயக்கம் இருந்தால் மாத்திரமே முன்னோக்கிச் செல்வது சாத்தியப்படும். இன்றைய அரசியல் தேக்க நிலைமை போல எழுத்திலும் ஒரு தேக்க நிலை உருவானால் நாம் நகரக் கூடிய மாற்றுவெளியொன்று எமக்கு வாய்த்திடுமா? அப்படி ஒரு நிலைமை உருவானால் தாய் மொழியாகிய தமிழைப் போசியவாறு தான் தனிமைப்படுவோம். அந்த நிலையிலிருந்து நம்மை மீட்டெடுக்கக் கூடிய மர்ம மூலங்கள் ஏதாவது உண்டா?

மதம் சார்ந்த அரசியல், மதம் சார்ந்த இலக்கியம் இரண்டும் உருவாவதற்குப் பின்காலனியச் சமுக அரசுகளே காரணமாயிருந்திருக்கின்றன. உலகமயமாக்கல் மூலம் சமுகங்களின் சுயம் அழிக்கப்பட்டு மேற்கத்திய மோகம் பதிலீடுசெய்யப்பட்டுவருகிறது. இதிலிருந்தும் தம்மைக் காத்துக் கொள்வதற்கும் மதம் சார்பான எழுச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.(இதில் பின்நவீனத்துவத்தின் கூறுகளும் முகம் காட்டுகின்றன) இதனாலேயே சில நாடுகள் அடிப்படைவாதத்தை நோக்கி நகர்த்தப் பட்டுள்ளன. எமது நாட்டின் பௌத்த அடிப்படைவாதம் அதிகாரபீடங்களைத் தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதைப் போல.

அதிகாரத்தின் நெருக்கடிகள் சமுகத்தைப் நோக்கிப் பாயும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் நகர்வுகளை அது மேற்கொள்கிறது. முஸ்லிம் சமுகம் இரட்டை மேலாதிக்கங்களின் அழுத்தங்களுக்கு உற்பட்டுள்ளது. அதன் விளைவாக தமது பண்டைய சிந்தனைகளைக் கைவிட்டுப் புதிய கருத்தியல்களை உள்ளெடுத்துப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்படு கிறது. இவ்வகையில் முஸ்லிம் தேச இலக்கியம் என்பது அதன் மூல வேர்களைத் தேடியடைவதை விடவும் அரசியல் மையத்திலிருந்தே விரிவடைந்து செல்லுமென நினைக்கிறேன்.

இலங்கையின் தமிழ் இலக்கிய மையங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்ட காலம் இது. அந்த மையங்கள் மீது கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் சிதைவடையும் பொழுதும் ‘முஸ்லிம் தேச இலக்கியம்’ என்ற கருத்து வலுப்பெறுகிறது.

தமிழ் இலக்கியத்திலிருந்து “பெண் மொழி” தன்னை விடுவித்துக் கொண்டது போல இஸ்லாமிய இலக்கியமும் தன்னை விடுவித்துக் கொள்ள முற்படுகிறதா? அவ்வாறு நிகழும் பொழுது அதில் ஏற்படக் கூடிய அனுகூலங் களைப் போலவே பாதகமான விடயங்களும் ஏற்படவே செய்யும்.முஸ்லிம் தேச இலக்கியம் என்ற மகுடத்தின் கீழே நாம் ஒதுங்கும் பொழுது கிறிஸ்தவ தமிழ் இலக்கியம், இந்து தமிழ் இலக்கியம் என்ற பாகுபாடுகளும் மோலோங்கும் அல்லவா? (அல்லது அவை தமக்குள் இணையக் கூடிய சாத்தியங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.) அவ்வாறு இணையும் பொழுது பின்னோக்கித் தள்ளப் படாதிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை “முஸ்லிம் தேச” இலக்கியம் கொண்டுள்ளதா? அல்லது ஆரோக்கியமான நகர்வுகளை முஸ்லிம் இலக்கியம் மேற்கொண்டுள்ளதா?

தமிழ் இலக்கியத்தில் பெண் மொழிக்குக் கிடைத்த இடத்தைப் போல அல்லது அதைவிடவும் அகலமானதும் ஆழமானதுமான இடத்தை இஸ்லாமிய இலக்கியம் பெற்றுக் கொள்ளுமா? சமயம் சார்ந்த எல்லைக்குள் இருக்கும் பண்டைய இஸ்லாமிய இலக்கியங்கள் முஸ்லிம் அல்லாதவரும் படிக்கக் கூடிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றனவா? இன்றைய இளம் சமுதாயத்தின் அல்லது எழுதிக் கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளின் ஆர்வத்தை இவற்றின் மீது திருப்புவது சாத்தியமாகுமா?

முஸ்லிம் தேச இலக்கியம் எனும் போது அது வரையறுப்பது எதனை? இது தொடர்பாக யாரால் முன்வைக்கப் பட்ட கருத்து நிலை சரியானது? சமயம் சார்பாக இஸ்லாமிய மொழிப் பிரயோகங்களுடன் எழுதப் படும் இலக்கியங்கள் மாத்திரம் தான் இவற்றுள் அடங்குமா? அல்லது இவற்றுள் அடங்க வேண்டுமெனின் இனிவரும் படைப்புகள் யாவும் இஸ்லாமியப் பண்பாடு, கலாசாரங்களுக்கு உட்பட்டே எழுதப்பட வேண்டுமா? அப்படியெனில் இது வரை எழுதப் பட்ட பிரதிகளில் உள்ள தமிழ்ப் பாண்பாட்டுடன் தொடர்புடைய சொற்களை என்ன செய்வது?

“பெருவெளி”யினரின் பின்னவீனத்துவக் கூறுகள் முஸ்லிம் தேச இலக்கியத்தின் மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்தப்போகின்றன?ஆதிக்கம் என்ற பிரயோகம் தவறானதெனின் “பெருவெளி”யினரின் பின்னவீனத்துவக் கூறுகள் இஸ்லாமித் தமிழ் இலக்கியத்தை எவ்வாறு கட்டமைக்கப் போகின்றன?

இம்முறை மிஹாதின் “மாயவலைப் புதிரில் உதிரும் சலனங்கள்” புதிய உத்தியுடன் நகர்த்தப்பட்டுள்ளது. சஞ்சிகையைப் புரட்டிய பொழுது அதிலிருந்த மின்னஞ்சல் வடிவங்களே எனது கவனத்தை வெகுவாக ஈர்த்தவை. அந்தப் பிரதியின் ஆரம்பப் பகுதியைப் புரிந்து கொள்ளச் சிரமப்பட்டாலும் அதைத் தொடர்ந்து வரும் மின்னஞ்சல்கள் புரிந்து கொள்ளத் தக்க வகையில் அமைந்திருப்பது ஆறுதலான விடயம். அந்த Ethno hyper fantasima (என்ன பெயரிதுவோ?-இதைத் தமிழ்ப்படுத்த அதிக சொற்கள் தேவைப்படும் போல) ஹோர்மோன்; மிஹாதின் பிரதிகளில் அதிகமாக செல்வாக்குச் செலுத்துகின்றது போலும்

றகீபாவின் ‘செக்கல்’, ‘வேலி’ ஆகிய இரு கவிதைகளும் இன்றைய கவிதைகளின் செல்நெறியில் அமைந்திருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் ஆற்றலுடன் கவிதைகளைத் தருவார் என எதிர் பார்க்கலாம்.


No comments:

Contact

Web:
www.peruveli.blogspot.com & www.peruveliethal.wordpress.com

Email:
perueliethal@gmail.com, peruveligroup@yahoo.com , peruveli@hotmail.com