Tuesday, August 26, 2008

நிகழ்வுகளும் பதிவுகளும்

பெருவெளி:
முஸ்லிம்தேச கதையாடலுக்கான ஒன்றுகூடல்

21,22 மார்ச் 2008
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி
சேர் றாசிக் பரீட் மண்டபம்

- ஜ.எல். காலீது

இலங்கையில் இருந்து வெளிவரும் இதழ்களின் வரவுகளுக்கு இடையிலான காலம் மற்றும் அவற்றின் நிலைத்து நிற்கும் தன்மைகள் என்பன மிகவும் மந்தகதியிலே இருக்கின்றது. இன்னொரு மொழியில் இதனைக் கூறுவதென்றால் இலங்கை எழுத்துச் சூழல் மிகவும் தேக்கமடைந்த செயற்பாட்டையே கொண்டி ருக்கிறது. இவற்றிற்குள் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் எங்கெங்கோ திக்குவேறாய்க் கூட போய்விட்டனர். வாழ்க்கையின் வேகமான போக்கு, சதா ஓய்வின்றிய உழைப்பு என்பன சற்று நேரமாவது தன் குடும்பத்துடன் இருப்பதற்கே இடம் தராதுள்ளது. இதற்குள் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட முஸ்லிம்தேச இயங்கியலாளர்கள் பெருவெளியின் ஏற்பாட்டில் முஸ்லிம்தேச கதையாடலுக்கான ஒன்று கூடலில் கலந்து கொண்டது நமது இயங்கியலின் தேவையினை உணரச் செய்தது.

பெருவெளி முஸ்லிம்தேச கதையாடலுக்கான ஒன்றுகூடல் இருநாள் நிகழ்வாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி சேர் றாசீக் பரீட் மண்டபத்தில் 21,22 மார்ச் 2008ம் திகதிகளில் நடைபெற்றது. இரு நாள் நிகழ்விற்கும் பிரதம பேச்சாளராக ஜாமீஆ நழீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பகத்தின் பிரதம செயற்பாட்டாளருமான ஏ.பீ.எம். இத்ரீஸ் கலந்து கொண்டார்.

முதல்நாள் நிகழ்வு பிற்பகல் ஆரம்பித்து முன்னிரவின் நிறைவுப் பகுதி வரை சென்றது. இந்நிகழ்வில் இன்று முனைப்பு கொண்டுள்ள புதிய தலைமுறைச் சேர்ந்த இளம் சகோதரர்கள் கலந்து கொண்டனர். ஆரோக்கிய மான கலந்துரையாடல் வடிவில் தொடங்கி அவ்வாறே நிறைவு பெற்ற நிகழ்வின் மைய பேசு பொருளாக சோனக தேசம் அமைந்திருந்தது.

வரலாறென்பது ஒரு வியாக்கியானம் /புனைவுதானே என்ற கருத்துடன் தொடங்கிய இக்கலந்துரையாடல் வரலாற்றினை இஸ்லாமிய நிலைக்களனினூடாக எவ்வாறு பார்க்க முடியும் என்ற அம்சத்தினை தொட்டு நின்றது. மிக நீண்ட காலம் இஸ்லாமிய முகாம் சார்ந்த உழைப்பினால் ஏ.பீ.எம். இத்ரீஸ் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் பகுப்பாய்வுத் தளங்களின் மீதும் இன்றைய நமது சூழல் செலுத்தியிருக்கின்ற தாக்கங்கள் பற்றிய வெளிப்பாடாய் அவரின் சோனக தேசப் பார்வை முன்வைக்கப்பட்டது. அர்த்த நாதீஸ்வரரின் ஊடாக ஆரம்பித்த அவரின் சோனக தேசம் பற்றிய ஆய்வுகள் நமது அண்டைப் பிரதேசங்களின் மீதான இஸ்லாமிய பார்வையொன்றாய்க் காணப்பட்டது. நமக்கு முன்னே இன்று எழுதப்பட்டிருக்கின்ற பேரினவாதத்தினது வரலாற்றுருவாக்கம் கொண்டுள்ள சிதைந்த உருவத்திற்கு முன் பல்வேறு சமூகவியல் தொடர்புகளின் பின்னணியல் சோனக தேசத்தினை பலமாக முன்வைத்த இத்ரீஸ் அவர்களின் உரையாடலோடு கலந்துரையாடலில் பங்கு பற்றியோரும் தொடராக தமது பக்க உரையா டல்களை முன்வைத்துக் கொண்டே வந்தது சிறப்பாகவும் திறந்த முறையிலான பாங்கினையும் கொண்டிருந்தது.

இரண்டாம் நாள் அமர்வுகள் அதே மண்டபத்தில் காலை மற்றும் பிற்பகல் அமர்வுகளாக இடம்பெற்றன. காலை அமர்வில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்ட இயங்கியலாளர்கள் முன்னிலையில் ஏபீஎம். இத்ரீஸினுடைய சோனக தேசம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. (வசதி கருதி சோனக தேசம் பற்றிய இரண்டு நாள் அமர்விலும் பேசப்பட்ட விடயங்கள் இக்கட்டுரை முடிவில் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன)

பிற்பகல் அமர்வு முஸ்லிம் தேச கதையாடல் மற்றும் பெருவெளியின் இயங்கியல் பற்றியுமான திறந்த கலந்துரையாடலாக இடம் பெற்றது. பெருவெளியின் செயற்பாடாளர்களான றபியூஸ், காலித், றிஜால், மிஹாத், அப்துல் றஸாக், பர்ஸான்.ஏஆர் ஆகியோரின் பெருவெளி செயற்பாட்டுத் தளம், நமக்கு முன்னிருக்கின்ற இயங்கியல்ஃசெயற்பாடுகள் பற்றியுமான உரையாடல் களுடன் இது ஆரம்பித்தது. பின்நவீனத்துவத்தினை ஏன் பெருவெளி தன் இயங்கியலுக்கான பொருளாகவும், சிறுபான்மை இனங்களின் அரசியலுக்கும் தேவை என்று அதனை பயன்படுத்துவதற்கான காரணம் பற்றியும் இவ்வுரையாடலில் முன்iவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருதமுனையைச் சேர்ந்த அலறி, றகுமான் ஏ. ஜெமீல் , ஜெஸ்மி எம். மூஸா, சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர், பஸ்ரி, அஸாருதீன்;; ஆகியவர்களுடன் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஐ.எல்.ஹாஷிம், ஒலுவிலைச் சேர்ந்த எஸ்.எம். அய்யூப், வாழைச் சேனையைச் சேர்ந்த ஏ.பீ.எம். இர்பான், மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த பிர்தௌஸ் நளீமி ஆகியோரின் நீண்ட விவாதங்கள் மற்றும் சுவாரசியம் நிறைந்த உரையாடல்களினூடாய் இக்கலந்துரையாடல் சிறப்பானதொரு அடித்தளத்தில் தொடராகச் சென்றது.

இவற்றினுள் பெருவெளி இதழ் உரிய காலப்பகுதிக்குள் கொண்டு வரப்படுவதன் அவசியம் பற்றியும் இடைவிடாத பெருவெளியின் வருகை பற்றியும் அனைத்து இயங்கியலாளரகளும் அழுத்திக் குறிப்பிட்டமை பெருவெளி செயற்பாடுகளின் கட்டாயத் தேவையினை நன்கு உணரச் செய்தது. முஸ்லிம் தேசம் என்பது இன்று சிலரின் அரசியலுக்குள் புகுந்துள்ளமை குறிப்பிட்டுக் காட்டப்பட்டதோடு முஸ்லிம் தேசத்தின் அனைத்து தளங்களையும் பேரினவாத ஆக்கிரமிப் பிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடு பற்றியும் இயங்கியலாளர்கள் உரையாடினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம்தேச செயற்பாடுகளினது மந்தநிலை பற்றிய நீண்ட விவாதங்கள் முன்னகர்த் தப்பட்டன. பல்கலைக்கழகத்தின் சமூக செயற்பாடுகளின் தேவை பற்றிய ஆரோக்கிய உரையாடலாக இந்த வாதங்கள் மாறிச் சென்றன.

மேலும் பெருவெளியினை மக்கள் மயப்படுத்த வேண்டிய கட்டாயத்தேவை பற்றியும் சமூகத்தின் அனைத்து தரப்பிற்குமான இதழ் பற்றியும் இயங்கியலாளர்கள் உரையாடினர். மற்றும் முஸ்லிம் தேசத்திற்குள் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், இதழ்களின் போக்குகள் பற்றி காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம் அரசியலினை விட தமது இயக்கங்களின் செல்வாக்கிற்காய் பாலைவனக் கட்டுரைகளை மொழிபெயர்த்து பக்கங்களை நிரப்பும் பத்திரிகைகளின் போக்குகள்பற்றி கவலையுடன் கூடிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்;டன.

பெருவெளி சந்தைப்படுத்தலில் எதிர்கொள்ளப்பட்ட சுவாரஸ்யத்தின் இனிமையான அனுபவங்கள் பகிரப்பட்டதோடு முஸ்லிம்தேச கதையாடல்களுக்கான ஒன்றுகூடல் தொடராகவும், அனைத்துப் பிரதேசங் களிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற விடயம் அனைவராலும் முன்வைக்கப்பட்டது.

பல்வேறு விடயங்கள் பற்றிய பெருவெளி முஸ்லிம்தேச கதையாடல்களுக்கான ஒன்றுகூடல் சிறப்பானதொரு புள்ளியில் நிறைவு பெற்றது.

No comments:

Contact

Web:
www.peruveli.blogspot.com & www.peruveliethal.wordpress.com

Email:
perueliethal@gmail.com, peruveligroup@yahoo.com , peruveli@hotmail.com